இந்தியாவின் நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?

NH 44

இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை என்ற சிறப்புக்குரியது NH 44. இது 3,745 கிலோ மீட்டர் (2,327 மைல்) தூரம் வரை நீண்டுள்ளது. இந்தியாவின் வடகோடி முனையிலுள்ள ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரை, தென் கோடி முனையிலுள்ள கன்னியாகுமரியுடன் இணைக்கிறது.
இந்த சாலை பற்றிய மேலும் சில சுவாரசியங்கள்….
ஜம்மு காஷ்மீர் (ஸ்ரீநகர் - ஜம்மு - காத்வா), பஞ்சாப் (பதான்கோட், ஜலந்தர், லூதியானா), அரியானா (அம்பாலா - குருஷேத்ரா - பானிபட் - சோனிபட், பரிதாபாத் - பல்வால்), டெல்லி, உத்தரபிரதேசம் (மதுரா – ஆக்ரா, ஜான்சி – லலித்பூர்), மத்தியபிரதேசம் (மொரேனா, குவாலியர், சாகர் – நரசிங்பூர் – லக்னாடன் - சியோனி), மராட்டியம் (நாக்பூர் - ஹிங்கட்காட்), தெலுங்கானா (அடிலாபாத் - நிர்மல் - நிஜாமாபாத் - கமரெட்டி – ஐதராபாத் - ஜாட்செர்லா, ஆந்திரா (கர்னூல் - தோன் - அனந்தபூர், கர்நாடகா (சிக்கபல்லாபூர் – பெங்களுரு), தமிழ்நாடு (ஓசூர் – கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் - கரூர் – திண்டுக்கல் - மதுரை – திருநெல்வேலி – கன்னியாகுமரி) வழியாக செல்கிறது.
NH 44 என பெயரிடப்படுவதற்கு இந்த நெடுஞ்சாலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டது. அவற்றுள் NH 1A, NH 1, NH 2, NH 3, NH 75, NH 26, NH 7 ஆகியவை முக்கியமானவை.
இந்தியாவின் பொருளாதாரத்திலும் NH 44 முக்கிய பங்கு வகிக்கிறது. நாடு முழுவதும் பொருட்களை கொண்டு செல்வதற்கும், தொழில்துறை மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் மையமாகவும் செயல்படுகிறது.
இந்த நெடுஞ்சாலை ஒரே சமயத்தில் தொடர்சியாக உருவாக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த ஏழு தேசிய நெடுஞ்சாலைகளை ஒன்றினைத்து பிரம்மாண்ட சாலை கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு போக்குவரத்தை நெறிபடுத்துவதற்கும், வடக்கு-தெற்கு பகுதிகளை இணைப்பதற்கும் முக்கிய பங்காற்றுகிறது.
NH 44 இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை மட்டுமின்றி, உலக அரங்கிலும் சாலை வலைப்பின்னல் கட்டமைப்பில் இணைந்துள்ளது. உலக அளவில் நீளமான நெடுஞ்சாலையில் 22-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்